search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் கொண்டாட்டம்"

    பூண்டி ஏரி ரூ.258 கோடி மதிப்பீட்டில் தூர் வாரப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததையடுத்து பொதுமக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். #PondiLake
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. இதன் உயரம் 35 அடி.

    3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். 760 சதுர மைல் நீர்வரத்து பரப்பளவு கொண்ட ஏரியில் 16 மதகுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    ஒவ்வொன்றும் 40 அடி அகலம், 15 அடி நீளம் கொண்ட இரும்பு ‌ஷட்டர்கள் மூலம் அதிகபட்சமாக வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடி தண்ணீரை வெளியேற்ற முடியும்.

    ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்படும்.

    மேலும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் மூலம் தண்ணீர் அனுப்பப்படுவது வழக்கம்.

    பூண்டி ஏரி சுமார் 40 வருடங்களாக தூர் வாரப்படாததால் தான் மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து வைக்க முடியாமல் வீணாக வெளியேறி விடும் நிலைமை ஏற்பட்டு வருகிறது.

    கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த பேய் மழையால் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    இப்படி 30 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.05 டி.எம்.சி.

    மேலும் பூண்டி ஏரியில் தண்ணீர் தேங்கி நின்றால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு தங்கு தடையின்றி நிலத்தடி நீர் கிடைக்கும். ஏரியை தூர் வாராததால் மழை காலங்களில் கிடைக்கும் தண்ணீர் வீணாக கடலில் கலந்து வந்தது.

    இதனை தவிர்க்க பூண்டி ஏரியை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் ரூ. 258 கோடி மதிப்பீட்டில் பூண்டி ஏரி தூர் வாரப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் நேற்று அறிவித்தார்.

    இதையடுத்து பூண்டி ஏரி பகுதியில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர். அவர்கள் பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கந்தசாமி தலைமையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    அப்போது அந்த வழியாக சென்ற பஸ்சில் இருந்த பயணிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் எத்திராஜ், பொதுக் குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, ஒன்றிய துணைச் செயலாளர் சம்பத், இணைச் செயலாளர் கோவிந்தராஜன், இளைஞர் அணிச் செயலாளர் சீனிவாசன், கிளைச் செயலாளர் ராஜசேகர், பூண்டி விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீர் புல்லரம்பாக்கம், தலையஞ்சேரி, ஈக்காடு, தண்ணீர்குளம், சிறுகடல் வரை பாய்ந்து செல்கிறது. அங்குள்ள மதகு வழியாக புழல் அல்லது செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில் இனைப்பு கால்வாய் பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இந்த கால்வாய்க்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கண்டலேறு அணையிலிருந்து தற்போது தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்தால் பூண்டி ஏரியிலிருந்து இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறந்துவிட உள்ளனர். இந்த தண்ணீர் தங்கு தடையின்றி புழல் அல்லது செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு சென்றடைய ஏதுவாக கால்வாய் சீரமைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. #PondiLake

    ×